Deiva Thirumagal -

Oct
2011
10

posted by Tamilnambi on ,

No comments


இந்த படத்தைப் பற்றி எழுத பேனாவை கையில் எடுத்து பத்து நிமிடங்கள் ஆகிவிட்டன. அனால் நான் நினைப்பதை சரியாக எழுத வார்த்தைகள் வரவில்லை. எங்கு ஆரம்பிப்பதென்றும் தெரியவில்லை. எங்கு முடிப்பதென்றும் தெரியவில்லை. என்னால் முடிந்த வரை இங்கு முயற்சிக்கிறேன்.

இப்படத்தை பார்ப்பதற்கு முன்பே இது ஒரு மன வளர்ச்சி குன்றியவன் பற்றிய படமென்றும், ஒரு தந்தை மகள் பாசத்தை பற்றிய படமென்றும், விக்ரமின் நடிப்பு திறமையை முற்றுமொருமுறை நிரூபிக்கபோகும் படமென்றும் தெரியும். பத்து முப்பத்தைந்துக்கு ஆரம்பிக்க வேண்டிய படம் ஏதோ கோளாறு காரணமாய் இன்னொரு முக்கால் மணி நேரம் தாமதமாய் ஆரம்பித்தது. ஆனால் படம் ஆரம்பித்த பிறகு, இந்த படத்தை பார்க்க இன்னொரு முக்கால் மணி நேரம் காத்திருந்தாலும் தப்பில்லை எனத்தோன்றியது.


படத்தை பார்க்க பார்க்க விக்ரமின் 'கிருஷ்ணா' கதாப்பாத்திரம் ஒரு கதாப்பாத்திரம் என்பதையே மறந்துவிட்டேன். கிருஷ்ணா சந்தோஷப்படும்போது நானும் சந்தோஷப்பட்டேன். கிருஷ்ணா அழும் போது எனக்கும் அழுகை வந்தது. கிருஷ்ணாவை யாராவது காயப்படுத்தினால் எனக்கு கோபம் வந்தது. வாழ்க்கையில் தினமும் எத்தனையோ வார்த்தைகளை உபயோகிக்கறோம். அவை எல்லாவற்றிற்கும் என்ன அர்த்தமென நம் மூளைக்கு தெரியும். ஆனால் இந்த மூளைக்கும் இதயத்துக்கும் பொதுவாக எங்கேயோ மறைந்திருந்து எல்லாவற்றையும் கட்டுபடுத்தும் இந்த மனதிற்கு வார்த்தைகள் தெரியாது; உணர்ச்சிகள் மட்டுமே தெரியும். அதனால்தான் சில நேரங்களில் நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லாமல் தடுமாறுகிறோம். நீங்கள் என்னதான் உங்கள் மூளைக்குள் இருக்கும் ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்சனரியிலிருந்து ஒரு சில வார்த்தைகளை எடுத்து உபயோகித்தாலும் நீங்கள் எதிர்பார்க்கும் திருப்தி கிடைக்காது.


ஏதோ என் மூளையில் ஒரு ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்சனரி இல்லாவிட்டாலும், இருக்கும் கோனார் நோட்சிலிருந்து, இந்த படத்தை பற்றி எழுத என்னால் கண்டுபிடிக்க முடிந்த ஒரே வார்த்தை : 'அழகு' . இந்த வார்த்தையை பல சமயங்களில் பல இடங்களில் பல அர்த்தத்தில் உபயோகித்திருக்கிறேன். ஆனால் இதை இங்கு உபயோகிப்பதின் மூலம் அதற்க்கெல்லாம் பிராயச்சித்தம் செய்வதை நினைக்கிறேன். இந்த படத்தின் ஒவ்வொரு ரீலில் உள்ள ஒவ்வொரு நிழற்படமும் அழகு. விக்ரமின் குழந்தைத்தனமான நடிப்பு அழகு. அனுஷ்கா அழகு. அமலா பால் அழகு. படத்தில் வரும் ஊட்டி அவலாஞ்சி கிராமம் அழகு. அங்குள்ள மக்கள் அழகு. மர வீடுகள் அழகு. ஜி வி பிரகாஷின் இசை அழகு. பாடல்கள் அழகு. பாடல் வரிகள் அழகு. இவை எல்லாவற்றையும் விட நிலாவாய் நடித்த பேபி சாரா அழகோ அழகு.

படம் முடியும்போது, இறுதி காட்சியில் பக்கத்தில் இருந்த அம்மா படம் அவ்வளோதானா எனக் கேட்க, தொண்டை வரை வந்த வார்த்தைகள் ஏனோ அதற்க்கு மேல் வராமல் தலையை மட்டும் ஆட்டினேன். அந்த உணர்ச்சிக்குரிய வார்த்தையை இன்னும் என் சிற்றறிவு கண்டறியவில்லை.நான் ஏதோ ஒரு சாதாரண பொழுதுபோக்கு படத்தை தலை மேல் தூக்கிவைத்து ஆடுகிறேன் என நீங்கள் நினைக்கலாம். நீங்களும் படத்தை போய் பாருங்கள். படம் முடியும்போது குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது மெளனமாக மனதில் ஒரு மகிழ்ச்சியும் துயரமும் நிறையும். அதை விவரிக்க முடியாமல்தான் இங்கு நான் திணறுகிறேன் என்பதை உணருவீர்கள்.


இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வருபவர்களிடம் படம் நன்றாக இருந்ததா என கேட்பதை விட, எத்தனை முறை உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினீர்கள் எனக் கேட்பதே சரியாக இருக்கும். வீட்டில் பாதி நேரம் மெகா சீரியல் பார்க்கும் குடும்ப ஸ்திரிகளை அழ வைப்பது சுலபம். ஆனால் நாள் முழுதும் நண்பர்களோடு ஊர் சுற்றிக்கொண்டு பிஸ்ஸா கார்னர்களில் நேரத்தை செலவிடும் எங்களை போன்ற இளைஞர்களையும் பிடித்து நிறுத்தி, வாழ்வில் நாங்கள் சர்வ சாதரணமாய் ரீசைகில் பின்னில் போட்டுவிடும் வாழ்வின் சின்ன சின்ன அழகான விஷயங்களை காட்டி, எங்களையும் கண் கலங்க செய்துவிட்டார் இயக்குனர் விஜய். விஜய் ! என் வாழ்வின் மூன்று மணிநேரங்களை இனிமையாக மாற்றியதற்காக மிக்க நன்றி !


இந்த பூமியில் நாம் வாழ்வதற்கு காரணம் ஆக்சிஜன், ஓசோன் படலம், புவியீர்ப்பு விசை என பல விஷயங்களை நியூட்டன், கலிலியோ எனப் பலர் பக்கம் பக்கமாய் டெரிவேசன் மூலம் நிரூபித்து பள்ளி காலங்களில் என் உயிரை எடுத்திருந்தாலும், வாடிகன் சிட்டி போப் முதல் எங்க ஊரு மாரியம்மன் கோவில் பூசாரி வரை பலர், பல சாமி பேரை சொல்லி அவைதான் காப்பாற்றுவதாக கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும், எனக்கு இந்த படத்தை பார்த்த பிறகு, மனிதர்களிடம் உள்ள எல்லா அறிவுக்கும் அப்பாற்பட்ட 'அன்பு' என்ற விஷயமே காரணம் என தோன்றுகிறது. அது மட்டும் இல்லாமல் போயிருந்தால் இந்நேரம் டைனோசார் எலும்புகளோடு நம் எலும்புகளையும் வேறொரு ஜீவராசி தோண்டியெடுத்து வரலாற்று பாடம் படித்து கொண்டிருக்கும்.

பின் குறிப்பு:
முடிந்தால் இப்படத்தின் ஒரிஜினல் டிவிடி வந்த பின், ஒன்றை வாங்கி வீட்டில் வையுங்கள். பிற்காலத்தில் உங்கள் பேரன் பேத்தி வந்து உங்கள் காலத்தில் வெறும் முன்னியும் ஷீலாவும் மட்டும்தான் வாழ்ந்தார்களா எனக் கேட்க்கும்போது உங்கள் மானத்தை காப்பாற்ற உதவும்.

Leave a Reply