Archive for 2011

Rajapattai -

Dec
2011
24

posted by Tamilnambi on ,

No comments





நீங்கள் ஒரு விக்ரம் ரசிகரா ? இளைய தளபதி விஜய் போல விக்ரம் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அந்தரத்தில் ஏன் பைட் பண்ணுவதில்லை என்று வருத்தபடுபவரா ? இல்ல தல அஜித் போல ஹீரோயின்ஸ வெளிநாட்டு டூயட் சான்குக்கும் வில்லன்கள் கடத்துறதுக்கு மட்டும் ஏன் யூஸ் பண்றதில்லைன்னு பீல் பண்றவரா ? இல்ல சூப்பர் ஸ்டார் ரஜினி போல 'கண்ணா !' ன்னு ஆரம்பிக்கற பஞ்ச் டயலாக் ஏன் சொல்றதில்லைன்னு புலம்பரவரா ? இல்ல உலக நாயகன் கமல் மாதிரி ஒரே படத்துல ஏன் பத்து கெட்டப் போடறதில்லைன்னு யோசிச்சிட்டு இருக்கறவரா ? அதுவும் இல்லேன்னா சிம்பு, தனுஷ் மாதிரி மட்டமான லிரிக்ஸோட ஒரு பாட்டை ஏன் விக்ரமே பாடலன்னு நெனக்கறவரா ? கவலை வேண்டாம் !! இதோ உங்களுக்காக ஒரு படம் !! ராஜபாட்டை !!


முதல்ல படத்து டைட்டில்ல இருந்து ஆரம்பிப்போம் ! ராஜபாட்டை !! கேக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா இந்த படத்துக்கு ஏன் இந்த பேர வச்சாங்கன்னு இப்ப வரைக்கும் எனக்கு புரியல ! ஒரு வேளை இந்த படம் ரோடு போடறதுல நடக்குற ஊழல் பத்தியோ இல்லேன்னா ஹீரோ இந்த படத்துல ஒரு ரோடு காண்ட்ரேக்டராவோ இருந்தா ஒத்துக்கலாம். அட அட் லீஸ்ட் படத்துல ' எப்பவுமே என் வழி தனி வழி' ஸ்டைல்ல 'எப்பவுமே நான் போற பாதை ராஜபாட்டை !' ன்னு ஒரு பன்ச் டயலாக் இருந்திருந்தா கூட பரவாயில்ல.. அதுவும் இல்ல ! அப்புறம் ஏன் இந்த படத்துக்கு ராஜபாட்டை ன்னு பேரு ?! ஒரு வேளை நேஷனல் ஹைவே ஓரத்துல நடக்குற நில அபகரிப்பு (land mafia) பத்தின படம்னா ? இருக்கலாம் !


அடுத்து ஹீரோ என்ட்ரி ! முதல்ல ரவுடிஸ் அட்டகாசமெல்லாம் காட்டிட்டு, கடைசியா ஒரு தாத்தா 'இதெல்லாம் தட்டி கேக்க சாமிதான் வரணும்'ன்னு சொல்றப்ப விக்ரம் என்ட்ரி ! அப்படியே கோயில் முன்னாடி அய்யனார் மாதிரி ஒரு பெரிய அருவாள கையில வச்சுட்டு மூணு லாங்க்வேஜ்ல பஞ்ச் டயலாக் பேசறார் ! கொஞ்சம் ஓவரா டயலாக் பேசறப்பவே லைட்டா இதுல ஏதாவது உள்குத்து இருக்குமோன்னு டவுட்டு வர ஆரம்பிச்சுது ! அதே மாதிரி இதெல்லாம் கனவுன்னு ஆயிருது ! இப்பெல்லாம் படத்துல எந்த ட்விஸ்டும் இல்லாம இருக்கறதுதான் பெரிய ட்விஸ்ட் ங்கற நெலைமை வந்துருச்சு !




அடுத்து ஹீரோ இன்ட்ரோடக்ஸன் சாங் ! இப்படி ஒரு விஷயம் படத்துல இல்லைன்னு தெரிஞ்சதும்தான் மனசுக்கு எவ்வளோ பெரிய நிம்மதி !! அடுத்து ஹீரோயின பாத்ததும் வர டூயட் சாங்கயும் 'ஆணியே புடுங்க வேணாம்'னு கேன்சல் பண்ணுனதும் ' சபாஷ் சுசிந்தரன் !' ன்னு சொல்லனும்னு தோணுச்சு. ஆனா உலகத்துலையே முதல் முறையா கிளைமாக்ஸ்க்கு அப்புறமா 'ரெண்டு லட்டு' ஐடம் சாங்க வச்சதும் 'பெரியப்பா ! நம்மள ஏமாத்திபுட்டாங்க பெரியப்பா !'ன்னு 'கண்டேன் காதலை' சந்தானம் மாதிரி அழ வேண்டியதா போச்சு. (ஏன்னா படத்துக்கு அம்மா கூட போயிருந்தேன். கிளைமாக்ஸ் முடிஞ்ச உடனே கூட கிளம்பி போக வேண்டிய கட்டாயம். நீங்க முன்னாடி போங்க, நான் ஸ்ரேயாவ பாத்துட்டு வரேன்னு சொல்ல முடியாதுல்ல..)


படத்துல கண்டிப்பா குறிப்பிட வேண்டிய கேரக்டர் ஒன்னு இருக்குன்னா அது கே. விஸ்வநாத் தான். படத்துல மத்த சீன் மாதிரியே இவர் சீன் ஒப்பனிங்கும் ரவுடிஸ் கூடத்தான். இவருக்கு ஒரு பிளாஷ்பேக்குன்னு ஆரம்பிச்சதும், போச்சுடா இனிமே செண்டிமெண்டா போட்டு புழிய போறங்கன்னு நெனச்சேன். ஆனா அவர் என்னடான்னா வெள்ளகாரன்கிட்ட சுதந்திரம் வாங்கறதுக்கு முன்னாடி எப்படி ஒரு வெள்ளகாரிய கரெக்ட் பண்ணுனாருன்னு ஆரம்பிச்சு, அம்மா கூட போற பொண்ண எப்படி சைட் அடிக்கறது, பொண்ண எப்படி ப்ரொபோஸ் பண்றதுன்னு ஐடியா மேல ஐடியாவா கொடுத்து நமக்கு இப்படி ஒரு காட்பாதர் இல்லாம போயிட்டரேன்னு பீல் பண்ண வச்சுட்டாரு.



படத்துல வேற முக்கியமான கேரக்டர்னா படத்தோட வில்லி 'அக்கா'வ சொல்லலாம். ஏதோ அக்கான்னு பேர் வச்சதால சொர்ணாக்கா மாதிரி தொண்டை கிழிய கத்தி நம்ம காத கிழிய வைக்கல. ஏதோ ஒரு மெகா சீரியல்ல வர்ற சைலன்ட் வில்லி மாமியார் மாதிரி கண்ண மட்டும் உருட்டி உருட்டி பயமுறுத்தறாங்க.

சரி படத்துல முக்கியமான எல்லாருக்கும் புடிச்ச முக்கியமான விஷயத்துக்கு வருவோம். ஹீரோயின்ஸ் !! தீக்ஸா ஷேத் ! சும்மா சொல்ல கூடாது ! சின்னதா ஒரு மூக்குத்தியோட படம் முழுக்க சிரிச்சிக்கிட்டே அழகா இருக்காங்க ! பாவம் கொஞ்சம் கொஞ்சம் டமில் மட்டுமே தெரிஞ்ச ஹீரோயின்கிட்ட இதவிட அதிகமா எதிர்பாக்கறது ரொம்ப அநியாயம் ! அப்புறம் 'வில்லாதி வில்லன்களும்' பாட்டுல வர்ற சலோனி ! 'மரியாத ராமண்ணா' (தெலுங்கு) பாத்து சலோனி பேன் ஆன நான் இனிமே அந்த போஸ்ட்ட ராஜினாமா பண்ணிரலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன். அடுத்து ஷ்ரேயா அண்ட் ரீமா சென் ! சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல.. படம் பாக்க வந்தவங்க எல்லாரும் க்ரெடிட்ஸ் முடியற வரைக்கும் போக கூடாதுன்னு எல்லா டைரக்டரும் என்னனம்மோ ட்ரை பண்றாங்க.. ஆனா யாருக்கும் இப்படி ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸ் ஐடம் சாங்க கிளைமேசுக்கு அப்புறம் வைக்கணும்னு தோணுனது இல்ல !!  



பாட்டெல்லாம் கேக்க ரொம்ப நல்லா இருக்கு. ஆனா தியேட்டர்ல பாக்கறப்போ கொட்டாவி வர்றத தடுக்க முடியல !

படத்துல எனக்கு புடிச்ச ரெண்டே விஷயம் ! ஹீரோவுக்கு நெருக்கமா இருக்கறவங்கள கொல்றதுக்கு எவ்வளவோ சான்ஸ் கெடைச்சும் அந்த மாதிரி எதுவும் கடைசி வரைக்கும் நடக்கல ! இதுல வர்ற வில்லன்களெல்லாம் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க ! அடுத்த விஷயம் கிளைமாக்ஸ் கோர்ட்லன்னதும் வில்லி குரூப் அங்கிருந்து தப்பிச்சு போக ட்ரை பண்ணி, அதுக்கு ஹீரோ பதினஞ்சு நிமிஷமா ஒரு கார் சேசிங் பண்ணி கடசீல பென்னி மில்ஸ்ல கொண்டு போய் நிறுத்தாம, சீன கோர்ட்லயே முடிச்சதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் !

சரி கடசீல நான் என்னதான் சொல்ல வரேன் ? இந்த படத்த பாக்கலாமா வேணாமா ? இப்படியெல்லாம் கேள்வி கேட்கபடாது. அதெல்லாம் நீங்கதான் முடிவு பண்ணனும். உங்களுக்காக நான் முடிவு பண்ண முடியாது. என்ன பொருத்தவரைக்கும் நான் இந்த படத்த பாத்து ரொம்ப என்ஜாய் பண்ணுனேன். ரெண்டு மாசம் கழிச்சு ப்ளாக் எழுதறேன்னா என்னை எவ்வளோ இன்ஸ்பைர் (inspire) பண்ணிருக்குன்னு பாத்துகோங்களேன் !  



இப்ப ரீசன்ட்டா படத்த பத்தி தெரிஞ்சுகிட்ட சில டிட் பிட்ஸ்:

  • இந்த படத்துல விக்ரம் மொத்தம் 17 கெட்டப்புல வர்றாராம். இத கின்னஸ்ல கொண்டு வர்ற முடியுமான்னு யோசிச்சிட்டு இருக்காங்களாம்.
  • படம் பாதி எடுக்கும் போதே சுசிந்த்ரனும் விக்ரமும் சேந்து இன்னொரு படம் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டாங்களாம். ப்ரோடியுசர், கதை எல்லாம் ரெடி. ஷூட்டிங் எப்ப ஆரம்பிக்க போகுதுன்னு தெரியல.

Deiva Thirumagal -

Oct
2011
10

posted by Tamilnambi on ,

No comments


இந்த படத்தைப் பற்றி எழுத பேனாவை கையில் எடுத்து பத்து நிமிடங்கள் ஆகிவிட்டன. அனால் நான் நினைப்பதை சரியாக எழுத வார்த்தைகள் வரவில்லை. எங்கு ஆரம்பிப்பதென்றும் தெரியவில்லை. எங்கு முடிப்பதென்றும் தெரியவில்லை. என்னால் முடிந்த வரை இங்கு முயற்சிக்கிறேன்.

இப்படத்தை பார்ப்பதற்கு முன்பே இது ஒரு மன வளர்ச்சி குன்றியவன் பற்றிய படமென்றும், ஒரு தந்தை மகள் பாசத்தை பற்றிய படமென்றும், விக்ரமின் நடிப்பு திறமையை முற்றுமொருமுறை நிரூபிக்கபோகும் படமென்றும் தெரியும். பத்து முப்பத்தைந்துக்கு ஆரம்பிக்க வேண்டிய படம் ஏதோ கோளாறு காரணமாய் இன்னொரு முக்கால் மணி நேரம் தாமதமாய் ஆரம்பித்தது. ஆனால் படம் ஆரம்பித்த பிறகு, இந்த படத்தை பார்க்க இன்னொரு முக்கால் மணி நேரம் காத்திருந்தாலும் தப்பில்லை எனத்தோன்றியது.


படத்தை பார்க்க பார்க்க விக்ரமின் 'கிருஷ்ணா' கதாப்பாத்திரம் ஒரு கதாப்பாத்திரம் என்பதையே மறந்துவிட்டேன். கிருஷ்ணா சந்தோஷப்படும்போது நானும் சந்தோஷப்பட்டேன். கிருஷ்ணா அழும் போது எனக்கும் அழுகை வந்தது. கிருஷ்ணாவை யாராவது காயப்படுத்தினால் எனக்கு கோபம் வந்தது. வாழ்க்கையில் தினமும் எத்தனையோ வார்த்தைகளை உபயோகிக்கறோம். அவை எல்லாவற்றிற்கும் என்ன அர்த்தமென நம் மூளைக்கு தெரியும். ஆனால் இந்த மூளைக்கும் இதயத்துக்கும் பொதுவாக எங்கேயோ மறைந்திருந்து எல்லாவற்றையும் கட்டுபடுத்தும் இந்த மனதிற்கு வார்த்தைகள் தெரியாது; உணர்ச்சிகள் மட்டுமே தெரியும். அதனால்தான் சில நேரங்களில் நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லாமல் தடுமாறுகிறோம். நீங்கள் என்னதான் உங்கள் மூளைக்குள் இருக்கும் ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்சனரியிலிருந்து ஒரு சில வார்த்தைகளை எடுத்து உபயோகித்தாலும் நீங்கள் எதிர்பார்க்கும் திருப்தி கிடைக்காது.


ஏதோ என் மூளையில் ஒரு ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்சனரி இல்லாவிட்டாலும், இருக்கும் கோனார் நோட்சிலிருந்து, இந்த படத்தை பற்றி எழுத என்னால் கண்டுபிடிக்க முடிந்த ஒரே வார்த்தை : 'அழகு' . இந்த வார்த்தையை பல சமயங்களில் பல இடங்களில் பல அர்த்தத்தில் உபயோகித்திருக்கிறேன். ஆனால் இதை இங்கு உபயோகிப்பதின் மூலம் அதற்க்கெல்லாம் பிராயச்சித்தம் செய்வதை நினைக்கிறேன். இந்த படத்தின் ஒவ்வொரு ரீலில் உள்ள ஒவ்வொரு நிழற்படமும் அழகு. விக்ரமின் குழந்தைத்தனமான நடிப்பு அழகு. அனுஷ்கா அழகு. அமலா பால் அழகு. படத்தில் வரும் ஊட்டி அவலாஞ்சி கிராமம் அழகு. அங்குள்ள மக்கள் அழகு. மர வீடுகள் அழகு. ஜி வி பிரகாஷின் இசை அழகு. பாடல்கள் அழகு. பாடல் வரிகள் அழகு. இவை எல்லாவற்றையும் விட நிலாவாய் நடித்த பேபி சாரா அழகோ அழகு.

படம் முடியும்போது, இறுதி காட்சியில் பக்கத்தில் இருந்த அம்மா படம் அவ்வளோதானா எனக் கேட்க, தொண்டை வரை வந்த வார்த்தைகள் ஏனோ அதற்க்கு மேல் வராமல் தலையை மட்டும் ஆட்டினேன். அந்த உணர்ச்சிக்குரிய வார்த்தையை இன்னும் என் சிற்றறிவு கண்டறியவில்லை.நான் ஏதோ ஒரு சாதாரண பொழுதுபோக்கு படத்தை தலை மேல் தூக்கிவைத்து ஆடுகிறேன் என நீங்கள் நினைக்கலாம். நீங்களும் படத்தை போய் பாருங்கள். படம் முடியும்போது குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது மெளனமாக மனதில் ஒரு மகிழ்ச்சியும் துயரமும் நிறையும். அதை விவரிக்க முடியாமல்தான் இங்கு நான் திணறுகிறேன் என்பதை உணருவீர்கள்.


இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வருபவர்களிடம் படம் நன்றாக இருந்ததா என கேட்பதை விட, எத்தனை முறை உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினீர்கள் எனக் கேட்பதே சரியாக இருக்கும். வீட்டில் பாதி நேரம் மெகா சீரியல் பார்க்கும் குடும்ப ஸ்திரிகளை அழ வைப்பது சுலபம். ஆனால் நாள் முழுதும் நண்பர்களோடு ஊர் சுற்றிக்கொண்டு பிஸ்ஸா கார்னர்களில் நேரத்தை செலவிடும் எங்களை போன்ற இளைஞர்களையும் பிடித்து நிறுத்தி, வாழ்வில் நாங்கள் சர்வ சாதரணமாய் ரீசைகில் பின்னில் போட்டுவிடும் வாழ்வின் சின்ன சின்ன அழகான விஷயங்களை காட்டி, எங்களையும் கண் கலங்க செய்துவிட்டார் இயக்குனர் விஜய். விஜய் ! என் வாழ்வின் மூன்று மணிநேரங்களை இனிமையாக மாற்றியதற்காக மிக்க நன்றி !


இந்த பூமியில் நாம் வாழ்வதற்கு காரணம் ஆக்சிஜன், ஓசோன் படலம், புவியீர்ப்பு விசை என பல விஷயங்களை நியூட்டன், கலிலியோ எனப் பலர் பக்கம் பக்கமாய் டெரிவேசன் மூலம் நிரூபித்து பள்ளி காலங்களில் என் உயிரை எடுத்திருந்தாலும், வாடிகன் சிட்டி போப் முதல் எங்க ஊரு மாரியம்மன் கோவில் பூசாரி வரை பலர், பல சாமி பேரை சொல்லி அவைதான் காப்பாற்றுவதாக கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும், எனக்கு இந்த படத்தை பார்த்த பிறகு, மனிதர்களிடம் உள்ள எல்லா அறிவுக்கும் அப்பாற்பட்ட 'அன்பு' என்ற விஷயமே காரணம் என தோன்றுகிறது. அது மட்டும் இல்லாமல் போயிருந்தால் இந்நேரம் டைனோசார் எலும்புகளோடு நம் எலும்புகளையும் வேறொரு ஜீவராசி தோண்டியெடுத்து வரலாற்று பாடம் படித்து கொண்டிருக்கும்.

பின் குறிப்பு:
முடிந்தால் இப்படத்தின் ஒரிஜினல் டிவிடி வந்த பின், ஒன்றை வாங்கி வீட்டில் வையுங்கள். பிற்காலத்தில் உங்கள் பேரன் பேத்தி வந்து உங்கள் காலத்தில் வெறும் முன்னியும் ஷீலாவும் மட்டும்தான் வாழ்ந்தார்களா எனக் கேட்க்கும்போது உங்கள் மானத்தை காப்பாற்ற உதவும்.

Venghai -

Oct
2011
10

posted by Tamilnambi on ,

No comments



படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடியும் சரி, பின்னாடியும் சரி பெருசா எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இந்த படத்துமேல இல்ல. அதாலதான் படம் ரிலீஸ் ஆகி நாலு நாள் ஆனாலும் கண்டுக்காம இருந்துட்டேன்.(தியேட்டருக்கு போய் படம் பாக்கணுமான்னு நெனச்ச என்னோட சோம்பேறித்தனமும் இதுக்கு ஒரு காரணம்னாலும் அதப்பத்தி இங்க பேசப்படாது. ) கடைசியா வீட்டுல வெட்டியா இருக்கறது தாங்க முடியாம 80 ரூபாய் டிக்கெட்ட 105 ரூபாய்க்கு வாங்கி பாத்துரலாம்னு முடிவு பண்ணுனேன்.( அய்யயோ.. ப்ளாக் டிக்கெட் இல்லைங்க.. இது ஆன்லைன் டிக்கெட் !)

சரின்னு மத்தியானம் பெய்ஞ்ச மழையையும் பொருட்படுத்தாம அதால விவசாயம் பண்ண நல்லா உழுது போட்ட மாதிரி இருக்கற ரோட்டையும் சமாளிச்சு ஒருவழியா தியேட்டருக்கு போய் சேந்துட்டேன்.( 105 ரூபா டிக்கெட் ஆச்சே !) படம் ஆரம்பிச்சதுல இருந்து மனுசுக்குள்ள ஒரே ஒரு உறுத்தல். இந்த இங்கிலீஷ்ல Déjà vu ன்னு சொல்லுவாங்க தெரியுமா ? அதாங்க.. எதை பாத்தாலும் இதை எங்கயோ ஏற்கனவே பாத்த மாதிரி இருக்கேன்னு சில சமயம் தோணுமே, அதேதான். இதுதான் எனக்கு படம் முழுக்க தோனுச்சு.

நான் பத்தாங் கிளாஸ் படிக்கறப்போ எப்படி கணக்கு வாத்தியார் முக்கியம்னு சொன்ன கணக்க அப்படியே மனப்பாடம் பண்ணி, அப்படியே முழு பரிட்சையிலே அதை ஸ்டெப் மாறாம போட்டு நூத்துக்கு நூறு வாங்குனேனோ ( ஹி ஹி.. தற்பெருமையெல்லாம் இல்லைங்க.. சும்மா ஒரு உதாரணத்துக்கு சொல்றேன்), அதே மாதிரி தனக்கு தெரிஞ்ச ஒரே ஒரு சினிமா பார்முலாவ இன்னொரு தாட்டி ஹரி பெர்பெக்டா போட்டிருக்கார். முதல்ல இருந்து கடைசீ வரைக்கும் ஒரு ஸ்டெப் மாறல. நான் கண்டிப்பா சொல்றேன், ஹரி டைரக்டர் ஆகலேன்னா கண்டிப்பா கணக்கு வாத்தியார்தான் ஆயிருப்பார்.

அதே சமயம், இந்த படத்த பாக்கறப்போ இன்னொரு விசயமும் தெரியுது. ஹரிக்கு கொஞ்சம் கொஞ்சமா கற்பனை சக்தியோ இல்ல ஞாபக சக்தியோ குறைஞ்சிட்டே வருது. ஏன்னா, அவர் ஏற்கனவே எடுத்த எல்லா படத்துல இருந்தும் கொஞ்சம் கொஞ்சமா எடுத்து, இந்த படத்தோட கதைய உருவாக்கிட்டாரு. பாவம் அவரும் என்னதான் பண்ணுவாரு ! இப்ப அரிவாள் முன்னேற்ற சங்கத்துல இவர் மட்டும்தான் இருக்காரு. அதான் இவர் படத்துலயிருந்து இவரே காபி அடிக்க வேண்டிய நெலமை. சரி, அப்படி என்னதான் கதைன்னு கேக்கறிங்களா ?




'கோவில்' ராஜ்கிரண் அப்பாவுக்கு 'வேல்' சூர்யா ஸ்டைல்ல மகன் தனுஷ். அதே எரியால பிரகாஷ் ராஜ் எம்.எல்.ஏ. முதல்ல அடிதடின்னு ஜாலியா இருக்கற தனுஷ் அப்பா பேச்சை கேட்டு அமைதியா இருக்க திருச்சி வர்றாரு. ஆனா 'தமிழ்' பிரசாந்த் மாதிரி இருக்க நெனைக்கற தனுஷ வில்லனுங்க இண்டர்வெல்ல 'தாமிரபரணி' விஷாலா மாதிரறாங்க. முதல் பாதியில தனுஷ கொல பண்ண ட்ரை பண்ணுன பிரகாஷ் ராஜ் ரெண்டாவது பாதியில அப்பா ராஜ்கிரன்ன கொல பண்ண ட்ரை பண்றாரு. இதனால தனுஷும் 'ஐயா' சரத் குமாரா மாறி அவர் அப்பாவ காப்பாத்திட்டே வர்றாரு. இதுக்கு நடுவுல முதல் பாதியில அறிமுகமாகர தமன்னாவால ( இந்த கேரக்டர் கூட ஏதோ தமிழ் படத்துல வந்துதான். நாந்தான் மறந்துட்டேன்) ரெண்டாவது பாதியில ஒரு சின்ன ட்விஸ்ட்டு.( இந்த ட்விஸ்டால கதை 10 டிகிரி கூட திரும்பல). எனிவேஸ் கடைசில எப்படி இந்த 'ஐயா' சரத் குமார் 'சிங்கம்' சூர்யாவா மாறி பிரகாஷ் ராஜ கொல்றாருங்கறதுதான் மீதி கதை ! (எழுதுற என்னாலையே முடியலையே, இதை படிக்கற உங்கள நெனைச்சா எனக்கு இன்னும் பாவமா இருக்கு !)

இதுக்கு நடுவுல நீங்க எதிர்பாக்குற ஹீரோ இன்ட்ரொடக்ஸன் சாங், சிவகங்கைல இருக்கற ஹீரோ ஹீரோயின் சிங்கப்பூர் போய் பாடற சாங், ஒரு சோக சாங், ஒரு மெலடி சாங், கடைசில வர்ற ஒரு குத்து சாங், நடுவுல அப்பப்ப வர்ற தீம் சாங், அப்புறம் இதுக்கும் நடுவுல அங்கங்க கொழம்புல பிச்சுப்போட்ட கொத்தமல்லி மாதிரி கஞ்சா கறுப்போட அலறல் காமெடி எல்லாமே இருக்கு.மேலும் இதுல நீங்க விசில் அடிக்கனும்னே எழுதுன பஞ்ச் டையலாக்ஸும் உண்டு. எக்ஸாம்பிள் :
பருப்புல உசந்தது முந்திரி; பதவில உசந்தது மந்திரி
எப்புடி ஹரி உங்களால மட்டும் இதெல்லாம் முடியுது ! பேரரசும் டி.ஆர்ரும் இல்லாத கொறைய நீங்கதான் நெறைக்கிரிங்க.

இது எல்லாத்தையும் சேத்து சுருக்கமா எனக்கு பக்கத்துல உக்காந்து படம் பாத்தவர் மாதிரி சொல்லனும்னா " படம் சப்பையா இருக்கு !!" ( அப்புறம் நான் மட்டும் ஏன் இவ்வளோ பெருசா எழுதி இருக்கேன்னு நீங்க கேக்கலாம்.. என்னங்க பண்றது.. நாலு வருசமா இன்ஜினியரிங் படிச்சு இப்படி ஆயிட்டேன் ! )

பின் குறிப்பு :
இதெல்லாத்தையும் படிச்ச பின்னாடியும் நீங்க உயிரோட இருந்தா கம்மென்ட்ஸ்ல இந்த போஸ்ட பத்தி என்ன நெனைக்கிரிங்கனு எழுதுங்க. :)